தமிழ்த்தேச தாவரவியல் இணையம்
மூலிகை விளக்க இணைய அகராதி - தாவரவியல் அகராதி - தாவர அரிச்சுவடி - ஆவணக்காப்பகம் - மின்னூலகம்
எங்கள் குழு
உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கும், தமிழினத்தின் மீது மதிப்பும் அன்பும் கொண்ட பிறதேசத்து மக்களுக்கும் வணக்கம்! "Tamil Botanical Society" எனும் இத்தமிழ்த்தேச தாவரவியல் இணையமானது, தமிழ்மக்களின் தாவர மருத்துவ அறிவினை, இன்றைய உலக நன்மைக்காகப் பயன்படுத்தவும், ஆங்காங்கே சிதறிக்கிடக்கும், தமிழ்த் தாவரவியல் ஆய்வார்களை ஒன்றிணைப்பதற்காகவும் உருவாக்கப்பட்டது. தமிழினத்தின் நிகரில்லாப் பண்புகளாகிய "கற்றல், கற்பித்தல்" எனும் இரு ஒப்பற்றக் குணங்களை ஆதாரமாகக் கொண்டியங்குவதுதான் இந்த தளத்தின் அடிப்படையே! கற்காலம்தொட்டு, பச்சிலைத்தாவரங்களின் துணைகொண்டு நோய் தீர்க்கும் அற்புத கலையான, பாரம்பரிய சிந்தாமணி மருத்துவத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் கிராமப்புற மக்களுக்கும், தற்காலத்திலும், உலக மருத்துவத்திற்கெல்லாம் முன்னோடியாகிய, ஆதி தமிழ் மருத்துவச் சிறப்புணர்ந்து, விருப்பமுடன் கற்றுக்கொள்ளும் இளையதலைமுறை சித்த மருத்துவ மாணவர்களுக்கும், எதிர்காலத்தில், நமது தமிழ்த்தேசத்தில் வளர்ந்த, ஒரு அற்புத மூலிகைத் தாவரத்தினால், உலக மக்களை அச்சுறுத்தப்போகும் பலவித நோய்களுக்கான மருந்துகளை கண்டறியப்போகும், மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கும், தமிழ்த்தேசத்தின் சரியான தாவரங்களைப் பற்றி, இன்றும், என்றும் எக்காலத்திலும் அடையாளம் காட்டிட, நாங்கள் செய்துள்ள முயற்சியே இந்த இணையதளம்! உலகெங்கிலும் உள்ள சித்த பாரம்பரிய தமிழ் மருத்துவர்களும், மூலிகை ஆராய்ச்சியாளர்களும், தாவரவியல் அறிஞர்களும், தங்கள் சுய அறிவைப்பெருக்கவும், தங்கள் அனுபவ அறிவைப்பகிரவும், தங்களுக்கான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளவும், இந்த இணையச்சாளரத்தைப் பயன்படுத்துக! தமிழ்த்தேசத்தின் தாவரங்களைப் பற்றிய ஞானமானது, இத்தேசத்தின் சித்தர்கள் நமக்குச் சேர்த்துத்தந்த சொத்து. அவர்கள் அரும்பாடுபட்டு, தியாகங்கள் பல செய்து, உலக வாழ்வைத் துறந்து, காடு மலைகளில் அண்டி வாழ்ந்து, பசி, தாகம் மறந்து, செய்த தவத்தினால், உணர்ந்த மெய்ஞானத்தாலும், எண்ணிலடங்கா சோதனைகள் மற்றும் ஆராய்ச்சிகளாலும் கைவரப்பெற்ற, இத்தகைய ஈடிணை கூறவியலாத எல்லையிலாத தாவரவியல் அறிவை, பெருங்கருணை கொண்டு, எளிமையாகப் பனையோலைகளில் எழுதி, பிறவிப்பெருங்கடலில், பலவித நோய்களால் அல்லலுற்ற, தமிழ்மக்களின் கைகளில் தந்தார்கள். காலத்தின் கோலத்தில் நீர் வந்துபறித்ததுபோக, நிலம் தின்று அழித்தது போக, நெருப்பு கொண்டு எரித்தது போக, கயவர் கொண்டு போனது போக, எஞ்சிய பனையோலைச் சுவடிகளை இத்தனை நூற்றாண்டுகள், தனது உயிரினும் மேலாகக் காத்த நம் முன்னோர்கள், இன்று பெரும் நம்பிக்கையோடு, நமது கைகளில் தந்துவிட்டார்கள். அதனைச் சீரியமுறையில் காத்து, வரும் சந்ததியினருக்கு கொண்டுசேர்ப்பதும், உலகளாவிய தமிழர்களுக்கும், ஏனையோருக்கும் பகிர்ந்துகொள்வதும், ஒவ்வொரு தமிழரின் கடமை. காலத்தினால் அழியாத இந்த இணைய தாவரவியல் ஆவணக்காப்பகம், அதற்கான ஒரு கூட்டு முயற்சி. உலகில் வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்களும், தாவர அறிஞர்களும், தன்னார்வலர்களும் மூலிகை மருத்துவர்களும், கணினி மேம்பாட்டாளர்களும் ஒன்றுகூடி, இந்த இணையதளத்தை, தற்போது வழி நடத்தி வருகின்றனர். பல்வேறு மூலிகைத்தாவரங்கள் நம் காலருகே வளர்ந்தும், அதன் அருமை தெரியாமல், பெருமை தெரியாமல், ஏன் பெயர்கூட தெரியாமல், வழக்கொழிந்து, மீண்டும் மண்ணோடு போகும் நிலை திரிந்து, தமிழ்த்தேசத்தாவரங்களின் முறையான அடையாளத்தை அறிந்து, பாரம்பரியத் தாவர இனங்களைக் காக்கும், சுய விழிப்புணர்வை அடையவும், இந்த இணையதளம் பயன்படும், என உறுதியாக நம்புகிறோம்! தமிழ்த்தேச தாவரவியல் இணையம், எந்தவித அரசாங்க (அ) தனியார் நிறுவன உதவியின்றி, எந்தவித வியாபார நோக்கமுமின்றி நடைபெறுகின்ற, எங்களால் தொடங்கப்பட்ட ஒரு தன்னார்வ கூட்டு முயற்சி. 2024-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த தாவரவியல் மின்னூலகம், சூரியசந்திரர் பிறழாத காலம் வரை, கடலோடு ஆறுகள் கூடுங்காலம் வரை, புல்லும் பூண்டும் முளைக்கும் காலம்வரை, தொடர்ந்து உலகமக்கள் அனைவருக்கும் சேவை செய்ய, அனைவரின் ஆதரவையும் வேண்டுகிறோம்.